History


பாடசாலையின் வரலாறு

ஒரு சமூகத்தின் இருப்பும் அதன் பண்பாட்டு கலாசார விழுமியங்களும், நடத்தைக்கோலங்களும், கடந்தகால சாதனைகளும் மண்மீது மடிந்து விடாமல் பேணப்படவேண்டுமாயின் அதன் வரலாறு பாதுகாக்கப்படவேண்டும். வரலாறில்லாத சமூகம் உலகில் வாழ்வதைவிட மண்ணில் மடிவதேமேல். ஒன்றின் தனித்துவத்தை அதன் அடையாளத்தைக் காக்க வரலாறு தக்க சான்றாகும். இந்த வகையில், ஒரு பாடசாலையின் வரலாறானது இன்றியமையாத ஒன்றாகவே காணப்படுகின்றது. தொடக்கப் புள்ளியில் அதன் நிலையில் இருந்து இன்று வரைக்கும் கண்ட பரிணாம வளர்ச்சியையும், அப்பாடசாலை குறித்த அடைவுமட்டத்தையும், அதன் பரிணாம மாற்றத்தையும் அது வேண்டிநிற்கும் தேவைகளையும் அதன் வேதனைகள், சாதனைகள் அனைத்தையும் பிரதிபலிக்கும் விம்பமாக இருப்பது அப்பாடசாலையின் வரலாறே.

வரலாறு குறித்துப் பேசுகையில் ஒன்றின் தோற்றம் வளர்ச்சி மட்டுமன்றி அது நடந்த பாதையில் கடந்து வந்த இன்னல்கள் குறித்தும் அடைந்துவந்த சாதனைகள் குறித்தும் பேசப்பட வேண்டும். அப்போதுதான் முழுமைபெற்ற வரலாறாய் செழுமையுடன் அது மிளிரும். இந்த அடிப்படையினை மையப்படுத்தி கமு/ காரைதீவு இராமகிருஷ்ண சங்க ஆண்கள் பாடசாலை குறித்த வரலாற்று ஆய்வினை அழியாத ஆவணமாய் இங்கு அறிமுகப்படுத்துகின்றோம்.


தொடக்கப் படியில் சில நொடிகள்

இயற்கை அன்னையின் இனிய தாலாட்டை இதயத்திற்குள் இதமாய் உள்வாங்கி கடலலைகளின் அன்பான முத்தத்தை கரைமீது வாங்கி இன்பமூட்டும் இறைவனின் ஓவியங்களான இயற்கையோடு ஒன்றித்துப்போன அழகிய ஊரே காரைதீவாகும். மீன்பாடும் தேன்நாடாம் மட்டுமாநகரின் தென்புறத்தில் 28 மைல்கள் (45 Km) தொலைவில் வயல்வெளிகள் நிலம் நிறைய மணம் பரப்பும் அம்பாரை மாவட்டத்தில் இது அமைந்துள்ளது. அதன் ஒரு கோடியில் குன்றின் மேல் விளக்காய் அறிவுத் தீபம் ஏற்றி காட்சி தருகிறது கமு/ காரைதீவு இராமகிருஷ்ண மிஷன் ஆண்கள் பாடசாலை.

காரைதீவானது கிழக்கிலங்கையில் ஒரு பகுதியில் இருந்திட்ட போதும்     முழு
இலங்கைக்கும் அது முத்தாய்ப்பாய் ஆனது. வரலாறு நெடுகிலும் பேசப்படும் தனித்துவம் அதற்குண்டு. அது ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய ஸ்ரீ சித்தானைக்குட்டிச்சித்தர் சித்துக்கள் பல புரிந்து சமாதியடைந்த பூமியாகும். அதுமட்டுமன்றி உலகம் போற்றும் முத்தமிழ் வித்தகர், கிழக்கின் கல்விக் களஞ்சியம் விபுலாநந்த அடிகள் பிறந்து வளர்ந்த மண்ணாகும். சேவையின்  சிகரம்   சுவாமி நடராஜானந்தா   பிறந்து   தவழ்ந்து     முத்தமிட்ட
மண்ணும்   இதுவேதான்.  இலங்கைத்  தீவிற்கு   விலைமதிப்பற்ற  பல  கல்விச்
செல்வங்களையும், வழங்கிய பெருமையும் இம் மண்ணையே சாரும்.

வளம்மிக்க பூமிகளை தன்வசப்படுத்த நினைத்து ஆக்கிரமிப்புப் பாதணியால், அடிமைகளாய் மிதிக்கும் மேற்குலகக் கழுகுகளின் பார்வை இந்து சமுத்திரத்தின் இரத்தினத் துவீபமாய் காட்சிதரும் இலங்கைத் தீவிலும் படிந்திருந்த வேளையில் ஆங்கில அரக்கர்கள் தம் மொழியில் வெறியாலும், மதம் என்ற போதையாலும் கல்வியைப் புகட்ட ஆங்காங்கே சில மிஷனரிகள் அமைத்தனர். அதற்கு இரையான பூமிகளுள் காரைதீவு ஒன்றும் விதிவிலக்கல்ல. காரைதீவின் 5ஆம் பிரிவில் Principal என அனைவராலும் அழைக்கப்பட்ட அமரர் மு. சச்சிதானந்தம் வாழ்ந்து தற்போது ச.க. மகேஸ்வரன் வாழ்கின்ற காணியில் ஓலைக்குடிசையில் ஓர் மிஷனரி தோற்றம் பெற்றது. திண்ணைப் பள்ளியாய் அறிவூட்ட நினைத்த அது அன்றிருந்த அறிவுப் பசியற்ற இதயங்களுக்கு உபயமாய்த் தோன்றவில்லை. அத்தோடு கத்தோலிக்க மிஷனரி என்பதால் இந்துமக்கள் செறிந்து வாழும் அப்பூமியில் அதன் செல்வாக்கு விழலுக்கிறைத்த நீரானது. எனினும், மிஷனரியை வளர்க்கும் அதன் திட்டம் இருநாள் பாடசாலையாகவும் இருநாள் வைத்தியசாலையாகவும் இயக்கம் பெற்றது.

மிஷனரிகளினூடே அறிவுத்தாகம் பெற்ற இந்துசமய மக்களும் தமக்கென
தனிப்பாடசாலை அமைக்கும் முயற்சியில் தம்மை அர்ப்பணித்தனர். இதன் விளைவு 1908ம் ஆண்டு ஓலைக் குடிசையில் தற்போது ஆண்கள் பாடசாலை அமைந்துள்ள வளவில் ஓர் மூலையில் திண்ணைப் பள்ளியாய் ஓர் கலங்கரை விளக்கு உலகிற்கு ஒளியேற்ற உயிர்பெறுகிறது. அன்றைய நாட்களில் அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு விஜயம்செய்த சுவாமி விவேகானந்தரின் சிஷ்யையாக விளங்கிய இராமகிருஷ்ண மிஷன் பெண் துறவி “சகோதரி அவபாமியா அம்மையார்" இரு சைவப் பாடசாலைகளைத் திறந்துவைத்தார் என்பது வரலாறு.

அவ்விரண்டும் முறையே ஆரைப்பற்றை, காரைதீவு போன்ற இடங்களில்
அமையப்பெற்றன என்று வரலாறு சொல்கிறது. இந்தவகையில் அவ் அம்மையாரினால் திறக்கப்பட்ட பாடசாலையே இதுவெனக் கொள்ளமுடியும். 1908இல் காரைதீவின் கலங்கரை விளக்காய் உருவான அப்பாடசாலையே இவ் ஊரின் முதற் பாடசாலையாகும். இது 1912ம்
ஆண்டு மா.க.மார்க்கண்டு முதலியார் என்பவரால் பதிவு செய்யப்படுகிறது.

அன்றிருந்த சூழலில் தனி சைவப் பாடசாலையாக இது உருவாக்கம் பெற்றிருந்த போதும் அப் பகுதிக்கான முதல் பாடசாலை என்ற வகையில் நிறைய முஸ்லிம் மாணவர்களும் கல்வி கற்றுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். சம்மாந்துறை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர் பகுதிகளைச் சேர்ந்த பல முஸ்லிம் மாணவர்கள் தமது அறிவுப் பசிக்கு தீனிதேடி இங்கு சென்றிருப்பதனைக் காணமுடிகின்றது.

1930இல் இப்பாடசாலையின் நிருவாகம் இராமகிருஷ்ண மிஷன் நிர்வாகத்திற்கு மாற்றப்படுகிறது. அதுவரைக்கும் இதன் பொறுப்புக்கள் அனைத்தும் மா.க.மார்க்கண்டு முதலியார் என்பவரின் கீழேயே காணப்பட்டன. மிஷன் நிர்வாகத்தால் பொறுப்பேற்கப்பட்ட பின் அதன் பொறுப்புகள் அனைத்தும் முறையே சுவாமி ஜீவானந்தா, சுவாமி விபுலானந்தர், சுவாமி நடராஜானந்தா, சுவாமி புருஷ்னாநந்தா போன்றோர் வசமாகிறது. இலங்கைத் தீவில் அன்றிருந்த இராமகிருஷ்ண மிஷன் அனைத்திற்குமான பொறுப்பாளர்களாகவும் இவர்களே காணப்பட்டனர்.

1912 தொடக்கம் 1953ம் ஆண்டு வரை தமிழ் முஸ்லிம் கலவன் பாடசாலையாகக் காணப்பட்ட இது 1953இன் பின்னர் தனித்தமிழ் பாடசாலையாக மாற்றம் பெற்றது. அப்போதிருந்த பிரதியமைச்சர் சேர் இப்ராஹீம் அவர்களின் வேண்டுகோளின் பேரில் சேர் ராஸீக்பரிட் அவர்களினால் முஸ்லிம்களுக்கென்று தனியாக பாடசாலை உருவாக்கப்பட்ட பின் அது தனித் தமிழ்ப் பாடசாலையானது. அன்றிருந்த சமயத்துடனான அதீத ஈடுபாடும் சைவ சமயத்தைக் கற்க வேண்டிய நிலை முஸ்லிம் மாணவர்களுக்கு ஏற்படுகிறது என்ற எண்ணமுமே இம்மாற்றத்திற்கான அதி முக்கிய காரணிகள் எனலாம்.

1908ம் ஆண்டு தொடங்கி ஆண், பெண் கலவன் பாடசாலையாக இருந்த இது,
இராமகிருஷ்ண மிஷன் பெண்கள் பாடசாலையின் உருவாக்கத்துடன் தனியான ஆண்கள் பாடசாலையானது. இப் பாடசாலை அன்றிருந்த கல்வித்திட்டத்தின் அடிப்படையில் 1952 வரைக்கும் உயர்தரப் பாடசாலையாகவே காணப்பட்டது. HSC (தரம் 08), SSC (O/L) தரம்
வரைக்கும் இங்கு கற்பிக்கப்பட்டது.

1934ஆம் ஆண்டு வரைக்கும் SSC முடிவடைந்த பின் "Teacher Certificate" எனும் தரச் சான்றிதழ் வழங்கப்பட்டு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு அனுப்பிவைக்கும் முறையும் இங்கு காணப்பட்டது.

1950 காலப்பகுதியில் மிஷன் பாடசாலைகளை விட அரச ஆங்கில மொழி மூலப் பாடசாலைகளுக்கே அதிக கிராக்கி நிலவியது. இதனால் அவ்வாறான கலைக் கூடங்களை அமைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டனர். இதன் விளைவு அக்கரையென அழைக்கப்படும் கல்லித்தீவின் கிழக்குப் பக்கத்தில் திரு.அருணந்தி அவர்களால் அரச கனிஷ்ட பாடசாலை ஒன்று உருவாக்கப்பட்டது. நற்பிரஜைகளையும் திறமையானவர்களையும்
உருவாக்கத் துடிக்கும் அப்பாடசாலையை உயர் பாடசாலையாக ஆக்குவதென்றும் அதன் வித்துக்களைப் பதனிட்டு வழங்கும் அடிப்படைத் தொழிற்சாலையாக இராமகிருஷ்ண மிஷன் ஆண்கள் பாடசாலையை மாற்றுவதெனவும் 1952ம் ஆண்டு ஊர் கூடி முடிவெடுக்கப்பட்டது.
அதுவரைக்கும் மிஷன் நிர்வாகத்தின் கீழ் இயங்கிவந்த இக் கலையகமானது 1962.12.15 இல் அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை இது அரச பாடசாலையாகவும், ஆரம்பப் பாடசாலையாகவும் இயங்கிவருகின்றது.

நூற்றாண்டு தாண்டிய பயணத்தில் வரலாறு படைத்த இப்பாடசாலையானது
அணையாத தீபமாய் இதுவரைக்கும் பயணிக்கின்றது. காரைதீவின் மடிமீது தவழ்ந்து, காடுகரையெங்கும் கல்வி மணம் பரப்பும் இப் பாடசாலை நீண்டதொரு பயணத்தில் சோர்வின்றிச் சென்றிட அதன் ஆரம்பத்தில் வித்திட்ட வித்துவான்களான அதிபர், ஆசான்கள் பெரிதும் காரணமாயினர்.

Comments

Popular posts from this blog

சிரமதான அறிவித்தல்

110 ஆவது ஆண்டு நிறைவு பரிசளிப்பு விழா அழைப்பிதழ்

சிரமதான அறிவித்தல்